நெஞ்சுறுதி துடுப்பு கொண்டு நெருப்பு நதியை நீந்தியவர்

Sridhar Kannan

நமது இந்தியச் சமூக அமைப்பு முறையில் ஆண்டாண்டுகளாக அடக்கப்பட்டு, அடிமையானவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக அயராது போராடி அதிலே வெற்றி கண்ட ஆற்றலாளர், ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்காக ஓயாது பாடுபட்ட உத்தமர். நசுக்கப்பட்ட நலிந்த பிரிவினரின் நல்வாழ்வுக்காக நாளும் உழைத்த நல்லவர்.

சிறுபான்மையர் வாழ்க்கை செழுமை பெற்றிட செவ்வனே தொண்டு செய்த செம்மல். ஒட்டு மொத்தத்தில் உழைக்கின்ற வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர். அவர் மேதைகளால் போற்றி மெச்சப்படும் மேதை.

அவரது வாழ்க்கை அனைவருக்கும் முன்னேற்றப் பாதை. அவர் மட்டும் தோன்றி யிருக்காவிட்டால் இன்று இந்நாட்டில் கோடிக்கணக்கானோர் அநாதை. இவ்வுலகில் நம்மால் என்ன செய்ய முடியுமென உள்ளம் நலிந்து கிடப்போருக்கும், விதி மீது பழிசொல்லி வீதியிலே திரிவோருக்கும், கடவுள் மீது பாரம் சுமத்தி வீணே காலத்தைக் கழிப்போருக்கும் அவரது சரித்திரம் புத்தி சொல்லி, புத்துணர்ச்சி ஊட்டி, புதுத்தெம்பு அளிக்கும் புதுமைப்பாடம்.

நெஞ்சில் உரமிருந்தால் நினைத்ததைச் செய்யலாம். தைரியமாய்க் களம் குதித்தால் எதிர்வரும் தடைகளையெல்லாம் தவிடு பொடியாக்கலாம். ஏன். முயன்றால் வானவில்லையே வளைத்து முண்டாசு கட்டலாம். அத்தகைய நம்பிக்கை ஊட்டுவதுதான் அந்த நாயகனின் வரலாறு.

அவரைச் சுற்றி வளைத்த சோதனைகளைச் சொல்லி மாளாது. அடடா, அவரது வாழ்க்கையில் எத்தனை எத்தனை தொல்லை. அவைகளை எப்படித் தாங்கினாரோ புரியவில்லை. தடைகளை எப்படித் தாண்டினாரோ தெரியவில்லை.

அவரைப் பின்னுக்கு இழுத்துத் தள்ள எத்தனையோ பின்னப்பட்டன சதி. அச் சதிகளை முறியடித்து, சாதனைகள் பல படைத்து நெஞ்சுறுதி துடுப்பு கொண்டு அவர் நீந்தியதோ நெருப்பு நதி.

அத்தனைக்கும் மேலாக அன்னை தேசத்திற்கு அந்த அறிவுச் சுடர் ஆக்கித் தந்தார் அரசியலமைப்பு விதி. அத்தகைய மாமேதை அனுபவித்த கொடுமைகளை விளக்கிச் சொல்வோமானால் மனசாட்சி உள்ளோரெல்லாம் வணங்குவது ஏதுவாகும்.

  • ‘அம்பேத்கர் அரும்பணிகள்’, என்கிற தலைப்பில் 1992ல் அகில இந்திய வானொலியில் அமைப்பாளர் திருமாவளவன் ஆற்றிய உரையிலிருந்து….
Share This Article
Leave a comment