தோழர் தணிகைச்செல்வன் மறைவு:
தமிழ்த்தேசிய- பாட்டாளி வர்க்க போராளிகளுக்கு நேர்ந்த பேரிழப்பு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
மக்கள் பாவலர் தோழர் தணிகைச்செல்வன்(90) அவர்கள் நேற்று மாலை காலமானார். இன்று அவருடைய திருவுடலுக்கு விசிக சார்பில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினோம். அவருடைய துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம். அத்துடன், இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று சிட்லபாக்கம் சுடுகாட்டில் இறுதி வணக்கம் செலுத்தினோம்.
அவருடைய மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் பெரும் துயரத்தையும் அளிக்கிறது. அவருடைய மறைவு தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கும் பாட்டாளி வர்க்கப் போராளிகளுக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்.
தோழர் தணிகைச் செல்வன் அவர்கள் இலக்கிய உலகில் மட்டுமின்றி, அரசியல் உலகிலும் நன்கு அறியப்பட்டவர். மார்க்சிய சிந்தனைகளைப் பரப்பியதில் அவருடைய பங்களிப்பு போற்றுதலுக்குரியது. இடதுசாரி பார்வையில் தமிழ்த்தேசியத்தை முன்மொழிந்தவர்களுள் முதன்மையானவர். தமிழ்த்தேசியம் என்பது தலித்தியத்தையும் உள்ளடக்கிய ஒரு கோட்பாடு என்று துணிந்து உரத்துப் பேசியவர்.
மக்களுக்கான அறப்போராட்டக் களங்களில் அவருடைய எழுச்சிமிகு போர்முழக்கக் கவிதைகள் கேட்போரின் நாடிநரம்புகளை முறுக்கேற்றும். ஈழவிடுதலைக்காக அவர் எழுப்பிய ஆவேசப் போர்க்குரலில் அனல் வீசும்.
அவருடைய தமிழ் அனைத்துத் தரப்பாரையும் அவரோடு வளைத்துப்போட்டது. தனது கவித்துவத் தமிழால் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் பேரன்பையும் பெற்றவர். கடந்த 2011 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் செம்மொழி ஞாயிறு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர். தமிழ்மண் இதழில் திங்கள்தோறும் வெளியான எனது “அமைப்பாய்த் திரள்வோம்” கட்டுரைகளை அவ்வப்போது படித்து என்னை ஊக்கப்படுத்தியவர். அதனை நூலாகத் தொகுத்தபோது அணிந்துரை எழுதி அந்நூலுக்குச் சிறப்பு சேர்த்தார். பௌத்தமே சாதி ஒழிப்புக்கான தீர்வாகவும் நம்பினார்.
கருத்தியல் தளத்தில் தொடர்ந்து எம்மை ஆதரித்து எப்போதும் எமக்கு புத்துணர்வை ஊட்டிய அவரது மறைவு தனிப்பட்ட முறையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
சிறுத்தைகளை உளப்பூர்வமாக நேசித்த சமத்துவப் பாவலர் தோழர் தணிகைச் செல்வன் அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.
30-10-2024