‘செம்மலர்’ இலக்கிய ஏட்டின் 2021 சூன் மாத இதழில் நான் எழுதிய ஒரு நெடுங்கவிதையின் இறுதிவரிகள் இவ்வாறு அமைந்துள்ளன:
‘மூடத்தனத்தை எதிர்க்கும் பெரியாரியம்
மூலதனத்தை எதிர்க்கும் அரிவாளியம்
சனாதனத்தை எதிர்க்கும் அம்பேத்தியம்
இந்த மூவியமே நாம் கற்க வேண்டிய காவியம்”.
இதில் விடுபட்டப்போன வரிஇது:
‘அந்தக் காவியத்தின் பெயர்தான்
மாவியம்! விரித்துச் சொன்னால்
திருமாவியம்”
இது ஏதோ கவிதைக்காகக் கூறப்பட்ட கற்பனை அல்ல.
ஒரு கவிதை வடிவில் கூறப்பட்ட அசல் உண்மை அப்பட்டமான உண்மை!
“பார்ப்பனியம் ஒரு தத்துவமே; அதற்கொரு வரலாறுண்டு. ஆனால் தலித்தியம் ஒரு தத்துவமே அல்ல; அதற்கொரு வரலாறு கிடையாது” என்று தமிழ்த் தேசியர்களில் ஒரு பிரிவினர் ஏடுகளில் எழுதி எகத்தாளமிட்ட போது, அமைதி காத்து ஆரவாரமின்றி நாம் அவர்களுக்கு அளித்த பதில் இதுதான்:
“பண்டைய இந்தியாவில் பவுத்தத் துக்கும் பார்ப்பனியத்துக்கும் இடையே பெரும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டமே இந்திய வரலாற்றைத் தீர்மானித்தது” என்கிறார் புரட்சியாளர் அறிஞர் அம்பேத்கர். இதனால் பெறப்படும் உண்மை யாதெனில், ‘தலித்தியத்தின் ஆதி வடிவம் பவுத்தமே’.
அடுத்த உண்மை: ‘தலித்தியத்தின் இருபதாம் நூற்றாண்டு வடிவம் அம்பேத்கரியம்’.
மூன்றாம் உண்மை: ‘தலித்தியத்தின் தமிழ் வடிவம் திருமாவியம்’ என்பதே.
இது உயர்வு நவிற்சி அன்று; உண்மை நவிற்சி என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிறப்பெடுத்த நாள் முதல் கடந்த 30 ஆண்டுகளாக அதன் வரலாற்றுப் பயணத்தைக் கூர்ந்தறியும் அரசியல் அறிவாணர்கள் அறிவார்கள்.
திருமாவளவனுக்கே உரிய பெருமை
தமிழ்நாட்டுச் சேரிக் குடிசைகளுக்குள் தமிழியத்தின் விரல் பிடித்து அழைத்துச் சென்ற பெருமை தோழர் தொல் திருமாவளவனுக்கே உரியது. தமிழர்களுக்கு உணர்த்தியவர் அண்ணா. இந்த மூன்று சிந்தனை மரபுகளின் நான்காம் பரிமாணமே திருமாவியம் என்ற தமிழ்த்தேசத் தலித்தியம். தலித்தியத்தை ஒப்பாதவர்கள் கூட மார்க்சியத்தை மறுப்பதில்லை என்பதால், நாம் அதிலிருந்தே தொடங்கி எதிர்வினை புரிவோம்.
மூலதனத்துக்கும் கூலி உழைப்புக்குமான பொருளியல் போராட்டமே முதலாளியத்துக்கும் பாட்டாளியத் துக்குமான அரசியல் போராக வடிவம் பெறுகிறது. முதலாளியத்தால் பாதிக்கப் படும் வர்க்கங்கள் பல இருப்பினும் எந்த வர்க்கத்தின் உபரி உழைப்பு இல்லாமல் முதலாளியம் உயிர்வாழ முடியாதோ, அந்த வர்க்கமே – அந்தப் பட்டாளி வர்க்கமே முதலாளியத்தின் உயிர்த் தேவையாகிறது, அதே நேரம் அதன் உயிர்ப்பகையும் பாட்டாளி வர்க்கமாகவே இருக்கிறது. சமூகத்தில் நிலவும் வர்க்க அடுக்கில், முதலாளியத்துக்கு ஆட்பட்ட பல வர்க்கங்கள் இருப்பினும், எல்லாப் பளுவையும் சுமந்துகொண்டு வர்க்க அடுக்கின் கடைசிக் கீழ் அடுக்காக நசுக்கப்பெறும் தொழிலாளி வர்க்கம்தான் தன் விடுவிப்புக்காய்ப் போராடித் தீர வேண்டிய உடனடித் தேவையை உணர்ந்து இயங்குகிறது. தன் விடுதலையில் இதர நேச வர்க்கங்களின் விடுதலையையும் அது சாத்தியப்படுத்தி விடுகிறது.
பாட்டாளி வர்க்கத் தலைமை
முதலாளிய ஒழிப்புப்போரின் இறுதிவரை சென்று அதை முறியடிக்கும் வர்க்க ஞாயமும் வர்க்கத் தேவையும் பாட்டாளி வர்க்கத்துக்கே உண்டு. தன் தேவை ஈடேறியதும் போரின் இடையிலேயே விலகிக் கொள்ளக் கூடிய இதர வர்க்கங்கள் முதலாளிய ஒழிப்பின் இறுதி எல்லை வரை போராடக் கூடியவையாக இரா. எனவே, வர்க்கப் போருக்குப் பாட்டாளி வர்க்கத் தலைமை என்பது வரலாற்றின் தேர்வாக அமைந்துவிட்டது. ‘பாட்டாளி வர்க்கத் தலைமையில் ஜனநாயகப் புரட்சி’ என்றும், வர்க்கப் புரட்சியில் பாட்டாளி வர்க்கமே தலைமையேற்கும்’ என்றும் லெனின் குறிப்பிடுவதன் பொருள் இதுதான்.
‘வர்ண சாதிகள்’ என்ற சமூக அடுக்கில் எல்லா வர்ணங்களுக்கும் சாதி களுக்கும் கீழாகக் கடைசித் தட்டில் ஒடுக்கப் படுவதே தலித் சமூகமாகும். தனக்குக் கீழ்ப்பட்ட சாதியினரைவிடத் தான் உயர்ந்தவன் என்ற பார்ப்பனியப் பண்ட ஏறப் பெற்றவர்களாகவே எல்லாச் சாதியினரும் உள்ளனர். தலித்துகளிடம் இந்தப் பண்பு இருக்க வாய்ப்பில்லை. னெனில் ஒடுக்குவதற்கென்று அவர்களுக்கும் கீழ்பட்ட சாதி என்று ஏதுமில்லை.
பார்ப்பனியம் ஏறப் பெறாத ஒரே தமிழ்ச் சமூகம்
‘பார்ப்பனியமேறப்பெறல்’ என்ற மேற்படிப் பண்பின் விழுக்காடு சாதியப் படிக்கட்டின் நிலைக்கேற்ப வேறுபடுகிறது. சைவ வேளாளரிடம் உள்ள பார்ப்பனியத்தின் விழுக்காடே சூத்திரச் சாதிகளில் அதிக அளவில் இருப்பதாக அறிவாணர்கள் கூறுகிறார்கள். இன்றைய நிலையில் பார்ப்பனியம் ஏறப்பெறாத சாதியே இல்லை. தலித் சமூகமே ஒரு சாதியன்று என்பதே உண்மை. வர்ண சாதியினராகப் பறையரோ, பள்ளரோ, அருந்ததியரோ இல்லை என்பதால் தலித்துகள் சாதியிலிகள் ஆகிறார்கள். எனவே, பார்ப்பனியம் ஏறப் பெறாத ஒரே தமிழ்ச் சமூகம் தலித்துகளே.
வர்க்கமற்ற சமூக அமைப்புக்கான போரில் எந்த வர்க்கத்தையும் சுரண்டாத ஆனால் முழுச்சுரண்டலுக்கும் உள்ளாகிற கடைசித் தட்டு வர்க்கமான பாட்டாளி வர்க்கமே வர்க்கப்போரின் தலைவனாக இருக்க இயலும் என்ற வரலாற்று விதியை, சாதியற்ற சமூக அமைப்புக்கான சமூக நீதிப் போருக்குப் பொருத்தினால், எந்தச் சாதியையும் ஒடுக்காத; ஆனால் எல்லாச் சாதியாலும் ஒடுக்கப்படுகிற தலித் சமூகமே தீண்டாமை ஒழிப்பை உட்கொண்ட சாதி ஒழிப்பு என்ற சமூக நீதிப்போரின் தலைவனாக இருக்க முடியும் என்ற முடிவுக்கே வரவேண்டும்.
பார்ப்பனியத்தை முற்றாகத் துடைத் தெறியும் சமூகப்போரில், பார்ப்பனியமற்ற சமூகமாகவும் பார்ப்பனியத்தின் தலைப் பகையாகவும் உள்ள தலித்துகளே சமூக நீதிப்போரின் இடையில் சுழன்று கொள்ளாமல் இறுதி வரை போராடும் தகவும், தேவையும் அக்கறையுமுள்ள சமூகமாக உள்ளனர். எனவே, சமூகநீதிப் புரட்சியின் தலைமை தலித்துகளுக்கே உரியது என்று மறுவாசிப்புக்குள்ளாகும் நடைமுறை மார்க்சியம் தீர்ப்பளிக்கிறது.
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
வர்க்கப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத் தலைமை – சமூகப் புரட்சியில் தலித்தியத் தலைமை என்ற கருத்து இந்த மண்ணுக்கேற்ற மார்க்சியமாகும்.
புத்தர் தொடக்கிவைத்த தலித்தியச் சிந்தனை மரபைத் தமிழிலக்கியங்களில் காணமுடியும். எனினும் திருவள்ளுவரே பார்ப்பனிய எதிர்ப்பை ஆழப்படுத்திப் பல குறட்பாக்களை வழங்கியவராவர். வள்ளலார், சித்தர்கள் ஆகியோர் பார்ப்பனிய எதிர்பை மக்கள் கருத்தாக மாற்ற முயன்றார்கள். அயோத்திதாசர் பார்ப்பனியக் கருத்தியலுக்கு எதிராகத் ‘தமிழன்’ என்ற இன அடையாளத்தை தலித்துகளுக்குத் தந்த தலித்தியச் சிந்தனையைத் தேசியக் கருத்த உயர்த்தினார். ரெட்டைமலையார் “பறையன்’ என்ற தலித்திய அடையாளமே பார்ப்பனியத்தை எதிர்த்து வீழ்த்த வல்லது என்று நம்பினார். ஆரியத்துக்கு எதிராகத் திராவிடத்தை நிறுத்துவதுதான் பார்பனியத்தை முறியடிக்கும் வழியாகும் என்று தலித்தியத்தைத் திராவிடத்துக்குள் வைத்து வழங்கினார் பெரியார்.
எனினும் பெளத்தத்துக்குப் பிறகு தலித்தியத்துக்கு ஒரு தத்துவ அடித்தளத்தைத் தருவதில் மேற்படிச் சிந்தனையாளர்கள் முழுமை பெறவில்லை. அந்த இடத்தை நிரப்பியவர் அறிஞர் அம்பேத்கரே ஆவார். அவரது ஆழ்ந்தகன்று நுண்ணிய அறிவுப்புலத்தின் பரப்பு முற்றாகத் தொகுக்கப்படாவிடினும் தொகுப்பட்ட 40 தொகுதிகளில் அத்தனை ஆயிரம் பக்கங்களிலும் பதிவாகியுள்ள அவரது தேர்ந்த சிந்தனையின் நூறு. விழுக்காடும் தலித் விடுதலையை நோக்கியே செயல்பட்டு இருப்பதைக் காணமுடியும். எனவே, புத்தருக்குப் பிறகு தலித் விடுதலைக்கான அடித்தளத்தை முழுமைப்படுத்திப் பார்ப்பனிய எதிர்ப்பைக் கூர்மைப்படுத்திய அம்பேத்கரியமே இந்த நூற்றாண்டின் தலித்தியம் என்பதே நமது முடிவு.
தலித்தியம் ஒரு சமூக அறிவியல். காலந்தோறும் வளரும் சிந்தனைத் திரட்சியே அந்த அறிவியலை வளர்த்து வருகிறது. பார்ப்பனிய ஒழிப்பை முன்னிலைப்படுத்தி ஒடுக்கப்பட்டோரை மேனிலைப்படுத்தும் எல்லாச் சிந்தனையும் தலித்தியம் சார்ந்ததே. சமூகநீதிப் புரட்சியின் இன்னொரு பெயர் தலித்தியப் புரட்சியே.
தலித் விடுதலை என்ற இலக்கின் தத்துவமே தலித்தியம்
தண்டாமை ஒழிப்புப் போரில் தலித்துகள் பெறும் வெற்றியின் ஊடாகத்தான் சாதி ஒழிப்பு என்று சமூகநீதி எய்தப் பெறும் என்பதால் சமூக நீதியின் அடித்தளம் தலித்திய நீதிதான் என்பது வெளிப்படை. பார்ப்பனியம் விதைத்த பெருங்கேடான தீண்டாமையால் நாடெங்கும் பிளவுண்டிருக்கும் சேரியும், ஊரும் தம் எல்லைகளைக் களைந்து, சாதிகளைக் களைந்து, அவை ஒரே குலம் ஆகும் வரைக்கும் பார்ப்பனிய எதிர்ப்பை முற்படுத்தும் கருத்தியல்களின் தொகுப்புக்குப் பெயர் தலித்தியமே.
மார்க்சியம், காந்தியம்போல் தலைவர்களின் பெயரால் வழங்கப் பட்டால்தான் அது தத்துவம் ஆகும் எனக் கருதுவது அறியாமை ஆகும். சோஷலிசம், கம்யூனிசம் ஆகிய தத்துவங்கள் தலைவரின் பெயரால் இல்லை. அவற்றின் இலக்கின் பெயராலேயே அவை அமைந்துள்ளன. அதே போல் தலித் விடுதலை என்ற. இலக்கின் தத்துவமே தலித்தியம்.
- தணிகைச்செல்வன்