இந்தியாவில் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!
வகுப்புவாத வன்முறைகள் தடுப்புச் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்!
————
திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்திய தலைமை அமைச்சராகப் பதவியேற்றதற்குப் பிறகு இந்தியாவில் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன. இஸ்லாமியர்களைப் போலவே கிறித்தவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக வகுப்புவாத வன்முறைத் தடுப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.
யுனைட்டெட் கிறிஸ்டியன் ஃபாரம் ( UCF) என்ற அமைப்பு இந்தியாவில் கிறித்தவர்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தொகுத்து ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் கிறித்தவர்களுக்கு எதிராக 834 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதன் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு 734 வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் 2024 இல் 100 வன்முறை சம்பவங்கள் கூடுதலாக நடந்துள்ளன என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது . இந்தியாவில் கிறித்தவர்களுக்கு எதிராக சராசரியாக தினமும் இரண்டு வன்முறைத் தாக்குதல்கள் நடக்கின்றன.
பாஜக ஆட்சி அமைந்த 2014 முதல் ஆண்டுக்கு ஆண்டு கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் மென்மேலும் உயர்ந்து வருகின்றன என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன:
•2014: 127 சம்பவங்கள்
•2015: 142 சம்பவங்கள்
•2016: 226 சம்பவங்கள்
•2017: 248 சம்பவங்கள்
•2018: 292 சம்பவங்கள்
•2019: 328 சம்பவங்கள்
•2020: 279 சம்பவங்கள்
•2021: 505 சம்பவங்கள்
•2022: 601 சம்பவங்கள்
•2023: 734 சம்பவங்கள்
•2024: 834 சம்பவங்கள்
இந்த வன்முறைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்தவை என்பது கவனிக்கத்தக்கது.
மோடி அரசு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதோடு, தனது வெறுப்புப் பேச்சின்மூலம் பிரதமரே அத்தகையத் தாக்குதல்களை ஊக்குவிக்கும் ஆபத்தான போக்குகளையும் காணமுடிகிறது.
சிறுபான்மை மக்கள்மீதான வகுப்புவாத வன்முறைகளைத் தடுப்பதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வகுப்புவாத வன்முறைத் தடுப்பு மசோதாவை ( Prevention of Communal and Targeted Violence (Access to Justice and Reparations) Bill) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியபோது அது மாநில அதிகாரத்தில் தலையிடுகிறது என அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பாஜகவுடன் சேர்ந்துகொண்டு எதிர்த்தார். அதனால் அது சட்டமாகவில்லை.
இந்நிலையில், அந்த மசோதாவை சட்டமாக்கும் அதிகாரம் மாநில அரசுக்கும் உள்ளது என்பதால், இந்தியாவுக்கு முன்னுதாரணமாக அம்மசோதாவைத் தமிழ்நாடு அரசு சட்டமாக்க முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர் ,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.