சனவரி 15 – சனவரி 25 :
தாய்த் தமிழ்க் காவலர்கள் வீரவணக்க நாள்கள்!
அன்னைத் தமிழ்க் காத்த போராளிகளின் ஈகத்தைப் போற்றுவோம்!
————————
தை முதல்நாள் தமிழர் திருநாளாகும்.
தனிச் சிறப்புக்குரிய அதே நாளில் தான் (சன-15) 1939-ஆண்டு இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி சிறைக் காவலில் இருந்தபோது வட சென்னையைச் சார்ந்த இராயபுரம் நடராசன் காலமானார்.
இந்தித் திணிப்பிலிருந்து அன்னைத் தமிழைக் காப்பதற்கு தனது இன்னுயிரை முதன்முதலில் ஈகமளித்த களப்போராளி நடராசன் அவர்களின் நினைவுநாளில் அவரின் பங்களிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
அவருடைய நினவுநாளையும் (சனவரி15, 1939) கீழப்பழுவூர் சின்னசாமி நினைவு நாளையும் (சனவரி25, 1965) நினைவுகூர்ந்திடும் வகையில், கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்டதைப்போல இந்த ஆண்டும் சனவரி15 முதல் சனவரி 25 வரை “தாய்த்தமிழ்க் காவலர்கள் வீரவணக்க நாட்களாகக்” கடைபிடிப்போம்.
இந்நாட்களில் இணையவழியில் வீரவணக்க கருத்தமர்வு நிகழ்வுகளை ஒருங்கிணைக்க வேண்டுமெனவும், நடராசன் தாளமுத்து உள்ளிட்ட அனைத்து மொழிப் போராளிகளின் திருவுருவப் படங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆங்காங்கே அரங்க நிகழ்வுகள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்திட வேண்டுமெனவும், சமூக வலைத்தளங்களில் அப்போராளிகளின் ஈகத்தைப் போற்றி முழக்கங்கள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றைப் படைத்துப் பரப்பிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.