தலித்துகளுக்கு மறுக்கப்படும் தமிழ் நிலம்
”அரசியல் விழிப்புணர்வு குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. அது உண்மையல்ல”
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையில் கணிசமாக தலித்துகள் வசிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எஸ்.சி வகுப்பினர் இங்கே சுமார் ஒரு கோடியே நாற்பத்தைந்து லட்சம் பேர் வாழ்கின்றனர்.
மக்கள் தொகையில் அது 20% ஆகும். அந்த அளவுக்கு எண்ணிக்கை பலம் கொண்ட சமூகம் தமிழ்நாட்டில் வேறெதுவும் இல்லை. அப்படியிருந்தும் அவர்களது நிலை மிகவும் பின்தங்கியே காணப்படுகிறது. அவர்களிடையே அரசியல் விழிப்புணர்வு குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. அது உண்மையல்ல.
வரலாற்றுப் பின்னணி: வீரமும், விவேகமும் செறிந்த வரலாறு
18ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டிலிருந்த தலித் மக்கள் அமைப்பாகச் சேர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். அதே வேளையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தம்மை ஒடுக்க முற்பட்டபோது அவர்களின் போலீஸ் படையைத் தாக்கி விரட்டியும் அடித்திருக்கிறார்கள். ”சென்னையில் கலெக்டராயிருந்த லயோனெல் ப்ளேஸ் (Lionel Place) என்பவர் அறிமுகப்படுத்திய புதிய வரிவிதிப்பு முறையை எதிர்த்து 1795 நவம்பரில் தலித்துகள் கலகத்தில் ஈடுபட்டனர்.
🏛️ 1795-1796 பூந்தமல்லி வெளிநடப்புப் போராட்டம்
சென்னை பூந்தமல்லி பகுதியிலிருந்த தலித்துகள் தமது ஊர்களைத் துறந்து ஆர்க்காட்டு நவாப்பின் ஆளுகைக்குக்கீழ் இருக்கும் பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். 1796 ஏப்ரல், மே மாதங்களில் அப்படி ஊரைத் துறந்து வெளியேறும் போராட்டம் பல பகுதிகளுக்கும் பரவியது. அவர்களைத் தடுப்பதற்காக கலெக்டர் ப்ளேஸ் மேற்கொண்ட அச்சுறுத்தல் முயற்சிகள் பலிக்கவில்லை. பூந்தமல்லிப் பகுதியில் பறையர் சமூகத்தவர் மத்தியில் தலைவர்களாக மதிக்கப்பட்ட பேட்டையா, பூந்தமல்லி குட்டி, மாங்காடு கொம்பன், பம்மல் கண்ணையன் ஆகியோரைக் கைதுசெய்ய ப்ளேஸ் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றிபெறவில்லை.
சென்னையில் பெத்தநாயக்கன்பேட்டைக்கு வடக்குக் கோடியில் இருந்த பெரிய பறைச்சேரியில் 1796 காலகட்டத்தில் பெரியதம்பி என்ற தலித் தலைவர் இருந்தாரென்பதும் லயோனெல் ப்ளேஸின் ஆவணங்களால் தெரியவருகிறது. சென்னைக்குத் தென்கிழக்கே நாற்பது மைலில் இருந்த கருங்குழி என்ற ஊரைச் சேர்ந்த பறையர் சமூகத்தவருக்கு பெரியதம்பி கடிதம் ஒன்றை எழுதி, அவர்கள் எல்லோரையும் சென்னையை நோக்கிப் புறப்பட்டு வரச்சொல்லித் தூண்டியதாகத் தகவல் கிடைத்ததையொட்டி பிரிட்டிஷ் கம்பெனியின் ஆட்கள் பெரியதம்பியைச் சென்று சந்தித்து அதுபற்றி விசாரித்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகளின் வரலாற்று ஆவணப் பாதுகாப்பு மையம்
களப் போராட்டங்கள் & சமூக ஆய்வுகள் தொடரும்