Home சிறப்புப் பக்கம் கட்சி… கொடி… கூட்டணி! `நட்சத்திரம் நகர்ந்து வந்த பாதை!’ | விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  

கட்சி… கொடி… கூட்டணி! `நட்சத்திரம் நகர்ந்து வந்த பாதை!’ | விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  

69
0

2001-ம் ஆண்டு, மே 22-ம் தேதி தமிழ்நாடு ஆளுநர் பாத்திமா பீவி முன்னிலையில் மங்களூரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, சட்டமன்றத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன். 

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் தமிழ்நாட்டில் எட்டு தொகுதிகளிலும், புதுச்சேரியில் இரண்டு தொகுதிகளிலுமாக மொத்தம் பத்து சட்டமன்றத் தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது! தேர்தல் முடிவில் கிடைத்த ஒரே வெற்றி, அதுவும் முதல் வெற்றி  திருமாவளனுடையதுதான்.

யார் இந்தத் திருமாவளவன்?

எங்கிருந்து தொடங்கியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வரலாற்றுப் பயணம்? 

பிளாக் பேந்தர்!’ 

1960-களில் அமெரிக்கக் கறுப்பின மாணவர் குழு ஒன்று, ‘Black Panther Party for Self-Defense’ என்ற அமைப்பை உருவாக்கியது. கறுப்பின மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட நிறவெறித் தாக்குதல்களையும், திட்டமிட்ட குற்றத் திணிப்புகளையும் இந்த அமைப்பு வலிமையுடன் எதிர்த்தது. ‘வெறுமனே அமெரிக்க சிவில் உரிமைச் சட்டங்களின் மூலமாகத் தங்களால் அரசியல் பிரதிநிதித்துவத்தையும், பொருளாதார பலத்தையும் பெற முடியாது’ என்று கருதிய நிலையில், தங்களுக்கென அரசியலில் ஓர் அமைப்பை உருவாக்கிக்கொண்டார்கள். அதுதான் ‘பிளாக் பேந்தர்’ எனும் கருஞ்சிறுத்தைகள் கட்சி! 

1966, அக்டோபர் 15-ம் தேதியன்று உருவாக்கப்பட்ட ‘பிளாக் பேந்தர் கட்சி’,  “இப்போது நம்முடைய தேவை என்ன..?” என்ற கேள்வியுடன் பத்து அம்சத் திட்டத்தை முன்வைத்தது. அவை, ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு முழுமையான சுதந்திரம், வேலைவாய்ப்பு, கண்ணியமான வீடுகள், உண்மையான வரலாற்றுக் கல்வி, உழைப்புச் சுரண்டல் மற்றும் ராணுவ சேவையிலிருந்து விலக்கு, போலீஸ் வன்முறைகளுக்கு முடிவு, சிறைவாசிகளின் விடுதலை, நேர்மையான விசாரணை, நிலம், ரொட்டி, உடை, நீதி மற்றும் அமைதி… இதெல்லாமும்தான்.  

Black Panther Party for Self-Defense
Black Panther Party for Self-Defense

நிறைவேறாத கனவுகளால் கொதிப்படைந்த பிளாக் பேந்தர்கள் ஆயுதமேந்தினார்கள். சிவில் உரிமைகளைப் படித்து, அதன் வழியே போர்க்குணம் மிக்க நடவடிக்கைகளில் இறங்கினார்கள். அமெரிக்காவின் துப்பாக்கிச் சட்டங்களைக் கற்று, தாங்களே ஆயுதம் வாங்கி, ரோந்துப் படைகளை உருவாக்கினார்கள். அதன் மூலம் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் பாதிக்கப்பட்டாலும், அவரைப் பாதுகாக்கும் சூழலை உருவாக்கினார்கள். பிளாக் பேந்தர்களின் இந்தப் புரட்சிகரச் செயல்பாடுகள், ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களிடையே எழுச்சியையும், அதிகாரவர்க்கத்திடம் கடும் எதிர்ப்பையும் ஒருசேர உருவாக்கின.

தலித் பேந்தர்ஸ்! 

1970-களில் பம்பாயில் தலித் அரசியல் எழுச்சி வீறுகொள்ளத் தொடங்கியிருந்தது. 1956-ல் அம்பேத்கரின் மரணத்துக்குப் பிறகு, அவரது பள்ளியிலிருந்து உருவான மாணவர்கள் படை  ‘குடியரசுக் கட்சி’யை உருவாக்கியிருந்தாலும், அதில் பல்வேறு பூசல்கள் எழுந்தன. கொள்கை முரண்களுடன் கட்சியிலிருந்து பலர் வெளியேறினார்கள். அதில், புரட்சிகரமான இளைஞர் பட்டாளம் ஒன்றும் இருந்தது. ராஜா தாலே, அருண் காம்ப்ளே, நம்தேவ் தசல், ஜே.வி.பவார், ராம்தாஸ் அத்வாலே, எஸ்.எம்.பிரதான், பிரீதம்குமார் ஷேகான்கர் என தலித் அரசியல் விழிப்புணர்வுடன் இயங்கிவந்த அந்த இளைஞர்கள் கையில் ‘பிளாக் பேந்தர்கள்’ குறித்த விரிவான கட்டுரை அடங்கிய ‘டைம்ஸ்’ இதழ் கிடைத்தது ஓர் எதிர்பாராத சம்பவம்தான்.  

“அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்றால், இங்கு தாழ்த்தப்பட்டவர்கள். அங்கு நிறவெறி என்றால், இங்கு சாதிய ஒடுக்குமுறை. இரண்டுக்கும் பெரிய தூரங்கள் இல்லை. நாம் ஏன், ‘பிளாக் பேந்தர்ஸ்’போல ஒரு தலித் அமைப்பை உருவாக்கக் கூடாது… என்று யோசித்தார்கள். விளைவு, ‘சாகு மகராஜ், ஜோதிராவ் புலே, அம்பேத்கர் வழியில், 1972, மே 29-ம் தேதி அந்த பம்பாய் இளைஞர்கள் தங்களது புரட்சிகர அமைப்பை உருவாக்கினார்கள். அதற்கு ‘தலித் பேந்தர்ஸ்’ என்றும் பெயரிட்டார்கள்.

தொல்.திருமாவளவன் | விடுதலைச் சிறுத்தைகள்
தொல்.திருமாவளவன் | விடுதலைச் சிறுத்தைகள்

அதுவரையிலான தலித் இயக்கங்களில் போர்க்குணமிக்க அமைப்பாகவும் செயல்பட்டது தலித் பேந்தர்ஸ். தலித் மக்களுக்கு எதிரான அநீதிகளைக் கேள்வி கேட்டதோடு, தலித்துகள்மீது வன்கொடுமைகளை நிகழ்த்துபவர்களுக்கு உடனடி பதிலடியும் கொடுத்தார்கள். குற்றமிழைத்தவர்கள் தலித் பேந்தர்ஸைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள். இதனால், பம்பாய் சால்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் வசித்த தலித் இளைஞர்களிடையேயும் ‘தலித் பேந்தர்ஸி’ன் புகழ் விறுவிறுவெனப் பரவியது! 

1973-ம் ஆண்டின் இறுதியில் தலித்துகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து மும்பை வோர்லி தீவுப்பகுதியில் பேரணி ஒன்றை நடத்த தலித் பேந்தர்ஸ் திட்டமிட்டது. கூடவே பம்பாய் இடைத்தேர்தலில், `தலித் மக்களைப் புறக்கணிப்போம்’ என்று அறைகூவலும் விடப்பட்டது. தலித் அமைப்பு ஒன்றின் இந்தப் புரட்சிகர எழுச்சி, அப்போது துளிர்விட்டிருந்த சில இந்துத்துவ அமைப்புகளுக்கும், ஆட்சியிலிருந்த கட்சிக்கும் எரிச்சலைத் தந்தது.

1974, ஜனவரியில் மும்பை வோர்லி பகுதியில் பேரணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, சிவசேனா தரப்பினர் திட்டமிட்ட வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். மூன்று மாதங்களாகக் கலவரம் நீடித்தது. ஆயிரக்கணக்கில் தலித் குடிசைகள் தாக்குதலுக்கு ஆளாகின. நூற்றுக்கணக்கான தலித் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். அதிகாரமும், காவல்துறையும், இந்துத்துவ அமைப்புகளும் தலித் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு, தலித் பேந்தர்ஸ் அமைப்பும் கடும் நெருக்கடிக்கு ஆளானது.

‘நீலமா… சிவப்பா?!’ 

இதற்கிடையே, 1976-ல் தீண்டாமை ஒழிப்புச் சட்டம், பெயர் மாற்றம் கண்டு பி.சி.ஆர் சட்டமாக (Protection of Civil Rights Act) அறிமுகமானது. சட்டம் செயல்படும் தன்மை குறித்து ஆராய, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள் தலைமையில் கமிட்டி ஒன்றை இந்திய நாடாளுமன்றம் அமைத்தது. இந்த கமிட்டி, நாடு முழுவதும் தலித் மக்கள்மீது நிகழ்த்தப்பட்டுவந்த கொடுமைகளைப் பதிவுசெய்தது. இந்திய அளவில் அந்த அறிக்கை பெரும் விவாதத்துக்குள்ளானது. 

இந்தச் சூழலில், ‘தலித் பேந்தர்ஸ்’ ஒரு கருத்தியல் முரணுக்குள் சிக்கியது. 1977-ல் ‘மார்க்சிசமா, பௌத்த-அம்பேத்கரியமா… நீலமா… சிவப்பா?’ என்ற விவாதம் தலித் பேந்தஸுக்குள் தீவிரமானது. நிறுவனர்களில் ஒருவரான ராஜா தாலே, ‘அம்பேத்கர் வழி’ என்றார். நாம்தே தசல், ‘மார்க்ஸ் வழி’ என்றார். சிலர், ‘எல்லோரையும் ஒருங்கிணைத்துச் செல்வோம்’ என்றார்கள். சிலர் ‘நாம் தனித்தன்மையுடன் இயங்குவோம்’ என்றார்கள். இறுதியில் ‘தலித் பேந்தர்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி, ஆளுக்கொரு பக்கம் இழுப்பதைவிட அமைப்பையே கலைத்துவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 1977- மார்ச்சில் ‘தலித் பேந்தர்ஸ்’ கலைக்கப்பட்டது!

அழகப்பன் மலைச்சாமி
அழகப்பன் மலைச்சாமி

இயக்கம் கலைக்கப்பட்டாலும், இளையோர் அனைவருக்கும் அம்பேத்கரின் துணைவியார் சவிதா அம்மையார்மீது தனிப்பட்ட மரியாதை தொடர்ந்தது. குடியரசுக் கட்சியினர் தொடங்கி, பிற தலித் அமைப்புகள் அனைத்துமே தங்களின் ஒருங்கிணைந்த தலைமையாக அவரை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். தலித் பேந்தரிலிருந்து விலகி வந்த அருண் காம்ப்ளே, ‘பாரதிய தலித் பேந்தர்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சவிதா அம்பேத்கரை அதன் ஒருங்கிணைந்த தலைவராக அறிவித்தார். இந்திய அளவில் 17 மாநிலங்களில் ‘பாரதிய தலித் பேந்தர்’ விரிவடைந்தபோதுதான் மதுரையைச் சேர்ந்த சட்டக் கல்வி மாணவர், அழகப்பன் மலைச்சாமி, அருண் காப்ளேவைச் சந்தித்து பாரதிய தலித் பேந்தரில் தன்னை இணைத்துக்கொண்டார்.

‘பேந்தர்’ மலைச்சாமி

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் அழகப்பன். இவரின் மகன் மலைச்சாமி தன் குடும்பத்திலிருந்து முதல் தலைமுறை பட்டதாரியானவர். 1970-களின் இறுதியில் எம்.எஸ்.எஸ் வக்பு வாரியக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்த மலைச்சாமி, தென்மாவட்ட பட்டியலின மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட சாதியக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர். கல்லூரியில் படிக்கும்போதே, பெரியார் பாதையில் பயணித்த மலைச்சாமி, திராவிடர் கழக இளைஞரணியின் ஒருங்கிணைப்பாளர் ஆனார்.

தான் வசித்த பகுதிகளில் சாதியைக் குறிப்பிட்டு அமைந்த ஊர்ச்சேரிகளின் பெயர்களை `விடுதலை நகர்’, `தந்தை பெரியார்’ நகர் என மாற்றினார். சுயமரியாதைத் திருமணங்களை நடத்துவது, மாணவர் எழுச்சி மன்றங்களை உருவாக்கி, அவர்களைச் சமுதாயப் பிரச்னைகளுக்காகப் போராடச் செய்வது என தலித் இளைஞர்களை அணிதிரட்டி, சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்திவந்தார்.

அழகப்பன் மலைச்சாமி
அழகப்பன் மலைச்சாமி

இந்தச் சூழலில்தான் 1980-ல், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தலித் இளைஞர்கள் பங்கேற்பதை எதிர்த்து, ஆதிக்கச் சமூகத்தினர் மோதலில் இறங்கினார்கள். தனது இளைஞர் படையுடன் சென்று அடித்தவர்களைத் திருப்பியடித்தார் மலைச்சாமி. அது தொடர்பான வழக்கில் கைதாகி, சிறைக்குச் சென்ற மலைச்சாமி, விடுதலையாகி வந்தபோது அவருக்குள் அம்பேத்கரியப் பார்வை பெருகியிருந்தது. தலித் மக்களின் முதல் தேவை, இந்தியச் சட்டங்கள் குறித்த அறிவுதான் என்ற எண்ணத்துடன் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் இணைந்து, சட்டக் கல்லூரி மாணவரானார் மலைச்சாமி!

`பாரதிய தலித் பேந்தர்ஸ்!’

இதே காலகட்டத்தில், பம்பாய்க்கு வேலைக்குச் சென்று திரும்பியிருந்த மலைச்சாமியின் நண்பர்கள் சிலர், அவரை பாரதிய தலித் பேந்தர் அமைப்பின் அமைப்பாளராக இருந்த அத்வாலேவிடம் அறிமுகம் செய்துவைத்தார்கள். அந்தத் தொடர்பின் மூலமாகத்தான் சவிதா அம்பேத்கரையும், அருண் காம்ப்ளேவையும் சந்தித்தார் மலைச்சாமி! 

1983-ம் ஆண்டு, பம்பாய்க்குச் சென்று திரும்பிய மலைச்சாமி, மதுரை தமுக்கம் மைதானத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னிலையில், ‘பாரதிய தலித் பேந்தர்ஸி’ன் தமிழ்நாடு அமைப்பாளரானார்.

அ.மலைச்சாமி, ‘பேந்தர்’ மலைச்சாமியானார்.

‘தலித் பேந்தர்ஸ்’ வழிவந்த காம்ப்ளேவுக்கும், திராவிடர் கழகம் வழிவந்த மலைச்சாமிக்கும் வாக்கு அரசியல்மீது நம்பிக்கை இருக்கவில்லை. தலித் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைத் தடுப்பது, தட்டிக்கேட்பது  உரிமைகளை மீட்பது, சமூக விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவது இவையே பாரதிய தலித் பேந்தர்ஸின் முக்கிய நோக்கங்களாக இருந்தன. இதற்குப் பங்களிப்பு செய்யும் பிற அமைப்புகளோடு இணைந்து தலித் விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றது பிடிபி.

இந்தச் சூழலில்தான் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த தன்னுடைய தம்பி விஜயன் வழியாக, தலித் மீனவ இளைஞர்கள் நல இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த இளைஞர் ஒருவரைச் சந்தித்தார் மலைச்சாமி. தலித் மக்களின் விடுதலையை ஆழமாகவும், அறிவுபூர்வமாகவும் மேடைகளில் முழங்கிய அந்த இளைஞர் மதுரை தடய அறிவியல்துறையில் இரண்டாம் நிலை உதவியாளராகப் பணியாற்றிவந்தார். அவரை பாரதிய தலித் பேந்தர்ஸின் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுத்தார் மலைச்சாமி. அந்த இளைஞர்தான் அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த இராமசாமி திருமாவளவன்!

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

திருமாவளவன்

1968-ம் ஆண்டு, ஆகஸ்ட் 17-ம் நாள் பிறந்த திருமாவளவன், அரியலூரில் ஆரம்பக்கல்வியை முடித்து, விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் பி.யூ.சி-யும், சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை வேதியியலும் படித்துவந்தார். அப்போது, ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில், பள்ளிக் கல்வியைப் பாதியில் கைவிட்ட குழந்தைகளுக்குப் பாடம் நடத்தும் பகுதி நேர வாத்தியாராக இருந்தார் திருமாவளவன். அதோடு, கொத்தவால் சாவடி உள்ளிட்ட இடங்களில் கணக்கெழுதும் பணிகளையும் செய்துவந்த திருமாவளவன், சென்னை பல்கலைக்கழகத்திலேயே எம்.ஏ கிரிமினாலஜி படிப்பிலும் சேர்ந்திருந்தார். 

இந்தக் காலகட்டங்களில்தான் ஈழத்தமிழர்கள் போராட்டம் கல்லூரி மாணவர்களிடையே தீவிரமடைந்திருந்தது. சென்னை பல்கலைக்கழகம் அதன் கேந்திரங்களில் ஒன்றாக இருந்தது. கறுப்பு ஜூலை இனக் கலவரம் தொடங்கி, திலீபன் உண்ணாவிரதம், ஈழத்தமிழர் புலப்பெயர்வு, விடுதலைப் போராட்டம் உள்ளிட்ட ஈழத்தமிழரின் அரசியல் நகர்வுகள் ஒவ்வொன்றும் திருமாவளவனின் கருத்துகளில் தாக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. 

இந்தச் சூழலில், திருமாவளவன் தங்கிப் படித்த எம்.சி.ராஜா விடுதியில் உடன் படித்துவந்த பட்டியல், பழங்குடிச் சமூக மாணவர்களை ஒருங்கிணைத்து ஈழப் போராட்டங்களில் பங்கேற்றுவந்தார் திருமாவளவன். 

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

கையெழுத்து பத்திரிகை, ஈழ உணர்வாளர்களை அழைத்து ஈழ விடுதலை மாநாடு, இன எழுச்சி மாநாடு உள்ளிட்ட பல பொதுக் கூட்டங்களையும் நடத்தி, மேடைகளில் கவிதைகள் முழங்கினார் திருமாவளவன். அதுவே, தி.மு.க தலைவர்களுடன் அவருக்கு அறிமுகத்தையும்  ஏற்படுத்தித் தந்தது. ‘திருமாவளவன் போன்ற மாணவர்களை நம் கட்சி முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று சொல்லி, அவரை தி.மு.க மாணவரணியில் இணைப்பதற்கான பரிந்துரைகளும் நடந்தேறின. 

இதற்கிடையே சட்டக் கல்லூரியிலும் இணைந்து சட்டம் பயின்றுவந்த திருமாவளவனுக்கு, அரசுத் தடயவியல்துறையில் வேலை கிடைத்திருந்தது. ஆனால், வழக்கறிஞராக வேண்டும் என்ற எண்ணத்திலிருந்த அவர், அந்தப் பணியில் சேராமலிருந்தார். பிறகு தந்தை ராமசாமியின் வேண்டுகோளுக்காகப் பணியில் சேர்ந்தவருக்கு, கோவையில் பணியிடம் ஒதுக்கப்பட்டது. அங்கு இடதுசாரிச் சிந்தனையாளர்களின் தொடர்பும் அவருக்கு ஏற்பட்டது.

மதுரை என்ட்ரி!

இந்தச் சூழலில் 1987-ம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர் மரணத்தின்போது நடைபெற்ற அரசியல் குழப்பங்களால் திருமாவளவன் உள்ளிட்டோரின் அரசுப் பணி உத்தரவில் சிக்கல் எழுந்தது. அதனால், அவரது வேலை பறிக்கப்பட்டது. பிறகு மீண்டும் அதே வேலை அவருக்கு மதுரையில் ஒதுக்கப்பட்டது. அங்குதான் பேந்தர் மலைச்சாமி – திருமாவளவன் அறிமுகமும் சந்திப்பும் நடைபெற்றன. பாரதிய பேந்தர்ஸின் ஒருசில கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார் திருமாவளவன். 

இந்த நிலையில், 1989 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் திருமாவளவனைப் போட்டியிடச் செய்ய, அவரின் நண்பரொருவர் முயன்றார். அதற்கான நேர்காணலிலும் திருமாவளவன் பங்கேற்ற நிலையில், அது குறித்த பத்திரிகைச் செய்திகளும் வெளியாகின. அது இன்னும் திருமாவளவன் மீதான பேந்தர் மலைச்சாமியின் கவனத்தை ஈர்த்தது.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

1989 தேர்தலில் திருமாவளவனைத் தேர்தல் அரசியலுக்குள் கொண்டுவர வேண்டுமென்று முயன்ற அவரின் நண்பரின் முயற்சி எடுபடவில்லை. ஆனால், அதே ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக `பேந்தர்’ மலைச்சாமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அது பி.டி.பி அமைப்பின் அரசியல் எழுச்சியில் பேரிடியாக விழுந்தது.

‘நீல சிவப்பு நட்சத்திரம்!’      

பேந்தர் மலைச்சாமின் ‘திடீர்’ மரணத்தையடுத்து 1989, செப்டம்பர் 15-ம் தேதி, மதுரை தமுக்கம் மைதானத்தில் இரங்கல் கூட்டம் ஒன்று ஏற்பாடானது. அதில் பங்கேற்றுப் பேசிய திருமாவளவனின் கண்ணீர் சுரக்கும் பேச்சு காண்போரைக் கலங்கடித்தது. அதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில், ‘பாரதிய தலித் பேந்தர்ஸின் புதிய மாநில அமைப்பாளராகப் பொறுப்பேற்க திருமாவளவனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், திருமாவளவனின் எண்ணம் வேறுவிதமானதாக இருந்தது. 

‘பாரதிய தலித் பேந்தரைப்’ பொறுத்தவரை அது மராத்தியப் பின்னணியுடன் உருவாக்கப்பட்ட அமைப்பு. அதன் தலைமை அமைப்பு மகாராஷ்டிராவில் இருந்தது. அமைப்பின் பெயரால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தொடங்கி, அனைத்து முடிவுகளும் தலைமையிடம் அனுமதி பெற்று, அமைப்பின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டே செயல்படுத்தவேண்டிய நிலைமை இருந்தது. முக்கியமாக, மகாராஷ்டிராவில் நிலவும் தலித் மக்களுக்கெதிரான பிரச்னைகளும், தமிழ்நாட்டின் பிரச்னைகளும் வெவ்வேறானவை. எனவே, நமக்கான அரசியல் அமைப்பை நாமே உருவாக்குவோம் என்று முடிவெடுத்தார் திருமாவளவன். 

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

முன்னதாக, பாரதிய தலித் பேந்தரை, ‘இந்திய ஒடுக்கப்பட்டோர் சிறுத்தை’ என்று மொழியாக்கம் செய்திருந்தாலும், 1990-ம் ஆண்டு, ஏப்ரல் 14-ம் நாள், அதே மதுரையில் ‘விடுதலைச் சிறுத்தைகள்’ என்ற தமது புதிய அமைப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தார் திருமாவளவன். அம்பேத்கரின் பௌத்த கருத்தியலைப் பிரதிபலிக்கும் வகையில் நீலமும், மார்க்ஸின் சிந்தனைகளை ஏற்கும் வகையில் சிவப்பும் பட்டைகளாக அமைய, நடுவே வெள்ளை நிற நட்சத்திரம்கொண்ட கொடி திருமாவளவனால் அறிமுகப்படுத்தப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் கட்சியாவதற்கான விதை மதுரை மண்ணிலேயே ஊன்றப்பட்டது! 

திமிறலின் ஒன்பது ஆண்டுகள் (1990-1999)

மதுரையில் அரசு ஊழியராக இருந்துகொண்டே, தென்மாவட்டங்களில் வாழ்ந்த பட்டியலின ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த ஒவ்வோர் ஊருக்கும் சென்று உரையாற்றினார் திருமாவளவன். தேர்தல் அரசியலில் நம்பிக்கையற்றுப் போயிருந்த அவர், ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான பிரச்னைகளில் களப்போராளியாக நின்று போராடினார். ஆதிக்கச் சமூகங்களின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவும், திருப்பித் தாக்கும்விதமாக ஆயுதங்கள் வைத்துக்கொள்வது குறித்தும் பேசினார். ‘திமிறியெழு… திருப்பியடி’ எனும் அதிரடி அரசியலைக் கையிலெடுத்த திருமாவளவனின் செயல்பாடுகள் மீது, நக்சல்பாரி இயக்கத்துடன் நட்புக்கரம் நீட்டியவர்களின் பார்வையும் விழுந்தது.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

இந்தச் சூழலில், நக்சல் அமைப்பினர்மீது அரசு மற்றும் காவல்துறையினரின் என்கவுன்ட்டர் நடவடிக்கைகள் தீவிரமாகிவந்தன. அதன் தொடர்ச்சியாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவராகவும், அரசுப் பணியாளராகவும் இருந்த திருமாவளவனை, காவல்துறை கைதுசெய்து, கடுமையாக விசாரிக்கும் அளவுக்கு இட்டுச் சென்றது. மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட சூழலில்தான் திருமாவளவன் மீது பிற அரசியல் கட்சிகளின் பார்வை விழுந்தது.

‘தலித் பேந்தர்ஸ்’போல முழுமையான மிலிட்டன்ட் அமைப்பாகவும் இல்லாமல், ஜனநாயக வழியில் தேர்தல் அரசியலைச் சந்திக்கும் அரசியல் கட்சியாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவிலான சமூக இயக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் இயங்கிவந்தபோது, ஒரே நேரத்தில் அவர்களுக்கான ஆதரவு தளமும், எதிர்ப்பும் வலுத்துவந்தன. பட்டியல் சமூகத்தவர்களே எந்தப் பக்கம் நிற்பது என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில்தான், தனது அரசுப் பணியைத் துறந்து முழுநேர அரசியலுக்குள் நுழைந்தார் திருமாவளவன்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

அதே காலகட்டத்தில் தென்மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் மத்தியில் முக்கியத் தலைவராக உருவெடுத்துவந்த டாக்டர் கிருஷ்ணசாமியும், தனது புதிய தமிழகம் கட்சியைத் தொடங்கி தேர்தல் அரசியலில் நுழைந்திருந்தார். அடுத்த சில ஆண்டுகளில், அதாவது 1999-ம் ஆண்டு, ஜூலை 23-ம் தேதி நெல்லை தாமிரபரணியில் மாஞ்சோலைப் படுகொலை நடைபெற்றது. அந்தப் படுகொலையைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் திருமாவளவனையும் தேர்தல் அரசியலுக்குள் கையைப் பிடித்து இழுத்துவந்தது. 

‘கோவிந்தசாமி கருப்பையா மூப்பனார்!’

ஒரு சமூக – அரசியல் இயக்கத் தலைவராகச் செயல்பட்டுவந்த திருமாவளவன், தேர்தல் அரசியல் பாதைக்குத் திரும்ப ஏறத்தாழ ஒரு தசாப்த காலகட்டம் தேவைப்பட்டது. அந்தத் திருப்புமுனைக்கு தமிழ்நாட்டின் அன்றைய அரசியல் சூழலும் முக்கியக் காரணம்.

1991 முதல் 96 வரை ஆட்சியிலிருந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசின் மீதான தமிழக மக்களின் அதிருப்தி, 1996 சட்டமன்றத் தேர்தலில் அபரிமிதமாக எதிரொலித்தது. அதுவே தி.மு.க கூட்டணிக்கு மகத்தான வெற்றியையும் பரிசளித்தது. அந்தத் தேர்தலில் 221 இடங்களில் தி.மு.க கூட்டணி வென்று ஆட்சியமைத்தபோது, காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்த அ.தி.மு.க வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியைப் பறிகொடுத்தது.

கருணாநிதியுடன் தொல்.திருமாவளவன்
கருணாநிதியுடன் தொல்.திருமாவளவன்

இதில் கவனிக்கத்தக்க விஷயம், அந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் சைக்கிள் சின்னத்துடன் களமிறங்கிய ஜி.கே.மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் 39 இடங்களில் வென்றிருந்தது. தவிர, அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் (1998) தி.மு.க கூட்டணி உதவியோடு மூன்று எம்.பி-க்களையும் பெற்றிருந்தது.


அந்தத் தேர்தலில் 30 எம்.பி தொகுதிகளைக் கைப்பற்றிய அ.தி.மு.க., வாஜ்பாய் அரசுக்கு அளித்த ஆதரவை 1999-ல் திரும்பப் பெற்றதால், மத்தியில் ஆட்சி கலைந்தது. அப்போது த.மா.கா-வின் மூன்று எம்.பி-க்களும் ’மதவாதம்’ என்ற காரணத்தைச் சொல்லி, பா.ஜ.க அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், 1999-ல் மீண்டும் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடன் பா.ஜ.க கைகோத்ததால் கடுப்பான ஜி.கே.மூப்பனார் கூட்டணியைவிட்டு வெளியேறினார்.  

அதுவரை, சட்டமன்றத்தில் 39 எம்.எல்.ஏ-க்கள், நாடாளுமன்றத்தில் 3 எம்.பி-க்களுடன் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ், அ.தி.மு.க அணியிலும் சேரத் தயாராக இல்லாத நிலையில், தனியாக மூன்றாம் அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவரோடு கைகோத்தது தமிழ்நாட்டில் இரண்டே கட்சிகள்தான். ஒன்று, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம். மற்றொன்று, திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி! மாஞ்சோலைப் படுகொலையைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டப் பந்தலில் ஜி.கே.மூப்பனாருடனான தேர்தல் கூட்டணி இறுதியானது.

 `முதல் தேர்தல்!’ 

1999 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வெறும் இரண்டு வார காலகட்டத்துக்குள் எடுக்கப்பட்ட அவசர முடிவு அது. பெரிய முன்னனுபவங்கள் இல்லை. த.மா.கா இரண்டு தொகுதிகளை  விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு  ஒதுக்கியது. சிதம்பரத்தில் திருமாவளவன் வேட்பாளர்.`‘சைக்கிள்‘ தேர்தல் சின்னம். `கடைசி மனிதனுக்கும் சனநாயகம் – எளிய மக்களுக்கும் அதிகாரம்’ என்ற முழக்கத்துடன் களத்துக்கு வந்தது வி.சி.க.

1999, செப்டம்பர் 4 & 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அந்தத் தேர்தலில், சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவன், 2,25,768 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அப்போது சிதம்பரம் தொகுதிக்குள் அடங்கியிருந்த, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், விருத்தாசலம், மங்களூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் பெருவாரியான வாக்குகளை அறுவடை செய்திருந்தது. அந்தத் தேர்தலில் த.மா.கா கூட்டணி பெற்ற 19.5 லட்சம் வாக்குகளில் 69 சதவிகிதம் பட்டியலின ஒடுக்கப்பட்ட மக்கள் அளித்த வாக்குகள்!

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

அதுவரையில், பல கட்சிகளுக்கு வாக்களித்துவந்த ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரணியாகத் திரண்டு தங்கள் பலத்தை அறிந்துகொண்டதோடு, பிற தரப்பினரது வெற்றியை பாதிக்கும் சூழலும் ஒருசேர உருவானதால், பட்டியலினத்தவர்களுக்கு எதிராகப் பலவிதமான வன்முறைகள் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டன. 

தலித் மக்களின் குடிசைகளை எரிப்பது, சொத்துகளைச் சூறையாடுவது, பெண்களை வன்கொடுமை செய்வது, இளைஞர்களைக் கொடூரமாகத் தாக்குவது என தலித் மக்கள் மீதான வன்முறை வெறியாட்டக்களமாக மாறியது 20-ம் நூற்றாண்டின் கடைசித்துளி! 

கூடவே,  1999 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க-காங்., கூட்டணி வேட்பாளரை மூன்றாமிடத்துக்குத் தள்ளிய திருமாவளவனைக் குறித்து தி.மு.க-வின் உயர்மட்டங்களில் அப்போது விசாரிக்கப்பட்டது. 

தெற்கிலிருந்து வடக்கு நோக்கி..!

`இந்தச் சாதிய வன்முறைகள் ஒருவகையில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன’ என்று சமூக தளங்களில் உரையாடல்கள் எழுந்தாலும், யாரையும் பொறுப்பேற்கச் செய்யும் அரசியல் வலு விடுதலைச் சிறுத்தைகளுக்கோ, வேறு பிற தலித் விடுதலை அமைப்புகளுக்கோ இல்லை. அப்படியான சூழலில்தான் மதுரையிலிருந்த திருமாவளவனை, வட தமிழ்நாட்டின் அரசியலில் கவனம் செலுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ்! ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர, வட தமிழ்நாட்டில் ‘பட்டியல்’ சமூக மக்கள்மீது தொடுக்கப்பட்ட வன்முறைகளும் படுகொலைகளுமே காரணங்களாக இருந்தன. 

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

1999 நாடாளுமன்றத் தேர்தலையடுத்து, இரண்டே ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. இந்த முறை மூன்றம் அணியைக் கலைத்துவிட்டு அ.தி.மு.க-வுடன் ஐக்கியமானார் ஜி.கே.மூப்பனார். அந்தப் பக்கம் செல்ல விரும்பாத வி.சி.க., தி.மு.க கூட்டணியில் இணைந்தது. 2001-ம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மங்களூர், அரூர், கண்டமங்கலம், சமயநல்லூர், வரகூர், நன்னிலம், தலைவாசல், அவிநாசி உள்ளிட்ட எட்டுத் தனித்தொகுதிகளிலும், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் ஏம்பலம், திருபுவனை ஆகிய இரண்டு தொகுதிகளிலுமாக மொத்தம் பத்து தொகுதிகள் வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்டன. 

திருமாவளனுடைய எண்ணம் சமயநல்லூரில் களமிறங்குவது. ஆனால், தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்த அன்றைய தி.மு.க தலைவர் கலைஞர், “திருமாவளவன் மங்களூரு தொகுதியில் போட்டியிடுவார்…” என்று அறிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்தப் பகுதியில்தான் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றிருந்தது வி.சி.க! 

தேர்தலின் முடிவில் 1,35,016 வாக்குகள் பதிவாகியிருந்தன. அவற்றில் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கிய திருமாவளவன், 64,627 வாக்குகள் பெற்று முதல் வெற்றியுடன் தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது எம்.எல்.ஏ பதவியைத் தூக்கியெறிந்து, தி.மு.க கூட்டணியையும் முறித்துக்கொண்டார்… ஏன்? 

ராஜினாமா

03-02-2004-ம் தேதியன்று தனது மங்களூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாகச் சொல்லி சபாநாயகர் காளிமுத்துவிடம் கடிதமளித்தார் திருமாவளவன். 2001-ம் ஆண்டில் அவர் வெற்றிபெற்றபோதும் தி.மு.க கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. விட்டதைப் பிடிக்கும் வேகத்துடன் வீறுகொண்டு எழுந்த அ.தி.மு.க., அந்த முறை  பா.ம.க., தா.மா.கா., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., ஃபார்வேர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என மெகா கூட்டணி அமைத்து 196 இடங்களில் வென்றது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் தி.மு.க உறுப்பினர்களுக்கிடையே திருமாவளவனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. 

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

அவர் பதவியிலிருந்த இரண்டரை ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடர்களில் அவர் பேசுவதற்குக் கிடைத்த வாய்ப்புகள் அரிதானவை. அதற்கும் தி.மு.க கொறடாவிடம் அனுமதி பெற வேண்டும். அவர் அனுமதித்தாலும், பேரவைத் தலைவர் அனுமதி முக்கியம். அந்தக் கருத்தும் ஆளுங்கட்சிக்கு எதிரானதாக இருந்தால் வேறு வினையே இல்லை. குறுக்கீடுகள், கூச்சல்கள் என்று சக்கர வியூகத்தில் சிக்கவைக்கும் நிலைதான்.  ஆனாலும், தன் சட்டமன்ற கன்னிப் பேச்சில், “அரசு வேலைவாய்ப்பு, பதவி உயர்வுகளில் ஒடுக்கப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட  சமூகத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில் 1995-ம் ஆண்டு ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்தை மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று பேசினார். 

அதோடு, தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்காகத் தனி வங்கி, பட்டியலின மக்கள் வேட்புமனு தாக்கல் செய்வதைத் தடுத்துவந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் தேர்தல் நடத்துவது, அமைச்சரவையில் தலித் சமூகத்தவர் பிரதிநிதித்துவம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார்மயமாவதன் பாதிப்பு, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் இணைப்புக்கெதிரான எதிர்ப்பு, சாதிய வன்முறையில்  குடிசைகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடு கோரிக்கை, இரட்டைக் குவளை, இரட்டைச் சுடுகாடு எனப் பல்வேறு விவகாரங்களைக் கேள்விகளாக முன்வைத்துவந்தார். 

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

சட்டமன்றத்துக்கு வெளியேயும் போராட்டங்கள், ஈழ விடுதலை அமைப்புகளுடனான தொடர்பு எனத் தனது செயல்பாடுகளைச் சுருக்கிக்கொள்ளவில்லை வி.சி.க. ஆனால், 2004-ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சீட் வழங்க தி.மு.க தலைமை தயங்கிய நிலையில், கலைஞர் கருணாநிதியோடு முரண்பட்டு தனது பதவியை ராஜினாமா செய்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.

‘நாடாளுமன்றத்துக்கு…’

2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் கடந்த முறை அ.தி.மு.க அமைத்ததுபோல வலுவான கூட்டணியை இந்த முறை தி.மு.க அமைத்திருந்தது. 22 ஆண்டுகள் கழித்து காங்கிரஸுடன் கைகோத்த தி.மு.க., தமிழ்நாடு, புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் வென்றது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உருவாக்கிய `மக்கள் கூட்டணி’யில் இணைந்து அம்பு சின்னத்தில் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் 2,55,773 வாக்குகள் பெற்று மீண்டும் இரண்டாம் இடத்தையே தக்கவைத்தார்.

2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்த வி.சி.க-வுக்கு ஒன்பது இடங்கள் ஒதுக்கப்பட்டன. மணிச் சின்னத்தில் போட்டியிட்ட வி.சி.க., இரண்டு இடங்களில் வென்று 4.26 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. மங்களூர் தொகுதியில் செல்வப்பெருந்தகையும், காட்டுமன்னார்கோயிலில் ரவிக்குமாரும் வி.சி.க எம்.எல்.ஏ-க்களானார்கள்.  

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

2009 ஈழப் பிரச்னை தமிழக அரசியல் களத்தில் கடும் தகிப்பை உருவாக்கியிருந்தது. காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி மீதான கடும் விமர்சனங்கள் இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பிக்கொண்டிருந்தன. 2ஜி அலைக்கற்றை உரிமம் தொடர்பான வழக்குகளும் தி.மு.க-வைத் திண்டாடச் செய்தன. அந்தச் சூழலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைந்ததால், அரசியல் பகைமுரண் காரணமாக அந்தக் கூட்டணியை உதறிவிட்டு திமுக-வுடன் இணைந்து விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தேர்தல் முடிவில், சிதம்பரத்தில் போட்டியிட்டு 4,28,804 வாக்குகள் பெற்ற  திருமாவளவன் முதன்முறையாக இந்திய நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.

`ஜனநாயக சக்தியாக…’ 

2009-19 வரையிலான பத்து ஆண்டுகளில் வி.சி.க., தனது கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. தேர்தல் வெற்றி, தோல்விகளைத் தாண்டி, சமூக தளத்தில் மதவாத, சாதிய இழிவுகளுக்கு எதிராகத் தீவிரம் குறையாமல் இயங்கிவந்தது. ஒருகட்டத்தில் பகைமுரண்களை விலக்கி, கொள்கைத் தோழனாக களமறிந்து செயல்பட்டது. பிறகு, மக்கள் நலக் கூட்டணி அமைத்து மூன்றாம் அணியை உருவாக்க முனைந்தது. இதனால் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது. அதேநேரம் வன்முறை சக்திகளின் வலையில் வீழாமல், அனைவருக்குமான ஜனநாயக சக்தியாக தன்னையே வடிவமைத்துக்கொண்டது வி.சி.க! 

கட்சி... கொடி... கூட்டணி | தொல். திருமாவளவன்
கட்சி… கொடி… கூட்டணி | தொல். திருமாவளவன்

அதன் விளைவு 2019-ம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் விடையானது. திமுக கூட்டணியோடு சிதம்பரம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன், 19 சுற்றுகள் வரை முன்னிலையிலிருந்தார். ஆனால், நள்ளிரவில் திடீரென வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. தமிழ்நாட்டு வாக்காளர்கள் அப்போது கண்விழித்துக் காத்திருந்தனர், தேர்தல் முடிவுக்காக. அரசியலில் எதிரணியில் நின்றவர்களும் அவரது வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த நள்ளிரவில் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபோது, பலரும் அதைக் கொண்டாடினர். அதுதான் அங்கனூர் இராமசாமி என்கிற தொல்காப்பியனின் மகன் தொல்.திருமாவளவன் உருவாக்கிய சமூக மாற்றம்! விடுதலைச் சிறுத்தைகள் என்ற கட்சியின் அரசியல் வரலாறு!

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதே தி.மு.க கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டு நான்கு எம்.எல்.ஏ-க்களைப் பெற்றது விடுதலைச் சிறுத்தைகள். ஏற்கெனவே, விழுப்புரத்தில் ரவிக்குமாரும், சிதம்பரத்தில் திருமாவளவனும் எம்.பி-க்களாக இருந்துவரும் நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் உருவாக்கியிருக்கும் `இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்துவருகிறது வி.சி.க.  

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

1970-களிலிருந்து இந்தியாவில் அடித்தளமிடப்பட்ட தலித் எழுச்சியை முற்போக்குப் பாதையில் வழிநடத்தும் ஓர் அரசியல் அமைப்பாக உருமாற்றியிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள். அதே காலகட்டத்தில் உருவான பல தலித்திய அமைப்புகள், மதவாதப் பிடியில் கரைந்துபோய்க்கொண்டிருக்கும் நிலையில், இந்த நீல சிவப்பு நட்சத்திரம் முன்னகர்ந்து சென்றுகொண்டேயிருக்கிறது!

கார்த்திக் புகழேந்தி

Source : Vikatan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here