புத்தரின் பாதங்களினால்
ஆசீர்வதிக்க வந்த மீட்பன்
ஒரு சிம்மாசனத்தைப் பார்த்து திடுக்கிட்டான்
அது பொய்யால்
களவால்
காமத்தால்
கொலையால்
எழுப்பப்பட்டிருந்த மண்டபமாக இருந்தது
கண்கள் உறுத்த
கால்களின் வீக்கத்தைத் தடவி
சில சோற்றுப் பருக்கைகளைத் தேடினான்
அவனது கைகள் நடுங்கின!
என்பிலா உடலெனத் தகித்தான்!
கொளுத்தும் வெயிலின் எதிர்நின்று
ஓ… பகவனே! என்னைப் பாரும்…
அவன் கூக்குரலிட்ட போது
பாதரட்சைகள் அந்த சிம்மாசனத்தை ஆண்டு கொண்டிருந்தன
அதன் வார்கள் நூல்களால் வேயப்பட்டிருந்த
சிறைக்கம்பிகளாய் இருந்தன
வெகுண்டான் மீட்பன்
வெகுண்டான் மீட்பன்
நீலக்கடலென எழுந்து நின்றான்
அலைகளெல்லாம்
பாபாசாகேப்…! பாபாசாகேப்…! என்று
கை கொட்டி ஆர்ப்பரித்தன
அடங்க மறு! அத்துமீறு!
திமிரி எழு! திருப்பி அடி!
அவன் ஓதிய நான்மறை
ஒடுக்கப்பட்டோரின் மந்திரங்களாகி
ஏழ்கடல் தாண்டி ஒலித்தன
இப்போதெல்லாம்
அவன் நீட்டிய கொடியை
ஏந்திப் பறக்கிறது வானம்
அவன் காட்டிய திசையை
வாங்கி வெளுக்கிறது கிழக்கு
அவனது முழக்கத்தின் சொற்களை
புயலின் பிள்ளைகளும் கற்கத் தொடங்கி விட்டார்கள்
அவன் அழுத கண்ணீரெல்லாம்
நட்சத்திரங்களாகி விட்டன
அவனது கோபங்களை மின்னல்கள்
தன் தாய்மடியில் பங்கிட்டு உண்ணுகின்றன
அந்த மீட்பனின் ஓயாத பாதங்களிலிருந்து
மேகங்கள் சுரக்கின்றன
இது திருமாவளவன் நாடெனப்
பொழிகிறது மாமழை
இது திருமாவளவன் நாடெனப்
பொழிகிறது மாமழை