தாய்ச்சொல்- 05
—————————–
—————————–
அவர் ஊழித் தீ!
—————————–
—————————–
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம்.
திசம்பர்-06 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள். அவர் காலமாகி அறுபத்தெட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
1956 திசம்பர் 06 அன்று புது தில்லி, அலிப்பூர் சாலையில் அவர் தங்கியிருந்த இல்லத்தில், நீரிழிவு மற்றும் குருதி அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு கடுமையாக உடல் நலிவுற்றுக் காலமானார். அப்போது அவர் சட்ட அமைச்சர் பதவியைத் துறந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
அவர் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த ‘இந்துச் சட்ட மசோதாவை’ நிறைவேற்ற விடாமல் தோல்வியுறச் செய்த சனாதனச் சக்திகளை எதிர்த்து, 1951 செப்டம்பர் 27 அன்று தனது சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் பதவியை உதறி எறிந்தார்.
அதன்பின்னர், தனது இறுதி மூச்சுவரையில் அவர் தில்லி இல்லத்தில் தங்கியிருந்தவாறே, பௌத்தம் தழுவியது, “புத்தரும் அவரது தம்மமும்” என்கிற வரலாற்றைப் புரட்டும் வல்லமை வாய்ந்த நூலினை வடித்தது உள்ளிட்ட அனைத்து அரும்பெரும் சாதனைகளையும் படைத்தார்.
1935 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலம், நாசிக் மாவட்டம், யேலோ என்னுமிடத்தில் நடைபெற்ற மதமாற்றம் தொடர்பான மாநாடு ஒன்றில் பேசும்போது உறுதியளித்தபடி, அவர் இறக்கும் தறுவாயில் ஒரு இந்துவாக அல்லாமல், ஒரு பௌத்தராகவே மறைந்தார்.
“புத்தரும் அவரது தம்மமும்” என்கிற மகத்தான அறநூலை, அவர் எழுதி முடித்த மூன்று நாள்களுக்குப் பின்னர், உறக்கத்திலேயே ‘மகா பரிநிர்வாண்’ அடைந்தார்.
அவரது திருவுடல் புது தில்லியிலிருந்து மும்பைக்குக் கொண்டுவரப்பட்டு, தாதர் என்னுமிடத்தில் அரபிக் கடலோரம் சௌப்பட்டி கடற்கரையில், பல இலட்சம் பேர் கதறி அழுது கண்ணீர் சிந்திய கொடுந்துயர ஓலங்களுக்கிடையில் பௌத்த முறைப்படி எரிக்கப்பட்டது.
அவரின் திருவுடல் எரித்த திருவிடம் தற்போது “சைத்ய பூமி” என்னும் திருப்பெயரால் போற்றப்படுகிறது.
இன்று உலகெங்கிலிலுமிருந்தும் நாள்தோறும் ‘சைத்ய பூமி’யைக் காண பல்லாயிரக் கணக்கில் மக்கள் திரள் திரளாய் வந்து குவிந்த வண்ணமுள்ளனர். குறிப்பாக, அங்கே உலகளாவிய பௌத்தர்களின் வருகை பெருகிவருகிறது.
தற்போது சைத்யபூமி என்னும் அம்பேத்கர் நினைவிடம், பல ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அங்கே 350 அடி உயரத்தில் அவரின் வெண்கலத் திருவுருவச் சிலை நிறுவப்படுகிறது.
அத்துடன், அவரது பெருவாழ்வை விவரிக்கும் கண்காட்சியகம், ஆராய்ச்சி மாணவச் செல்வங்களுக்கான மாபெரும் நூலகம், கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான தொழில்நுட்ப ஆய்வகம் என பல்வேறு பரிமாணங்களுடன் பன்னூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்திய தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்.
மாமனிதர் புரட்சியாளர் அம்பேத்கர் இன்னும் ஓரிரு பத்தாண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டியவர்.
ஆனால், 65 வயதிலேயே காலமாகிவிட்டார். ஓய்வில்லா, உறக்கமில்லா, உயிர்க் கருக்கும் உடலுழைப்பே அவரது வாழ்நாள் காலத்தைச் சுருக்கிவிட்டது.
தேடித் தேடி நூல்களைக் கற்பதிலும், ஆய்ந்து ஆய்ந்து நூல்களைப் படைப்பதிலும், அவரிடம் தீராத வேட்கை இருந்தது என்பதைவிட, தீவிரமான வெறி இருந்தது.
தனது கடைசி மூச்சுவரையில் படிப்பதிலும் எழுதுவதிலும் அவருக்கிருந்த வேகம் பெருவியப்புக்குரியது. அதற்குச் சான்று அவரது அளப்பரிய படைப்பான, “புத்தரும் அவரது தம்மமும்” என்னும் திருவறம் நவிலும் திருநூலாகும்.
கடைசி மூச்சை நிறுத்துவதற்கு
மூன்று நாள்களுக்கு முன்னர்தான்
அந்த நன்னூலை எழுதிமுடித்தார்.
அது அவரது பேரறிவுக்கும் பேருழைப்புக்கும் நம் கண்முன்னே நிற்கும் கூடுதல் சான்று.
எஞ்ஞான்றும் காலத்தால் அழியாத கழிபேருவக்கும் ஞானக்கொடை.
புரட்சியாளர் அம்பேத்கர்,
இந்திய மண்ணுக்கும்
உலகளாவிய மானுடத்துக்கும் ஆற்றியுள்ள பங்களிப்புகள் அளப்பரியவை.
அவற்றுள் இந்திய அரசமைப்புச் சட்டமும்; புத்தரும் அவரது தம்மமும் என்கிற நூலும் யாவற்றிலும் விஞ்சி நிற்கும் மகத்தான படைப்புகளாகும்.
இவை இரண்டும் புரட்சியாளர் அம்பேத்கரின் புகழ் மகுடத்தில் ஒளிரும் ஒப்புயர்வில்லா உன்னத மாமணிகள். இவற்றுக்கு அவர் கொடுத்த பெருவிலை தனது உடல்நலமே ஆகும். அவர் ஓய்வையும் உறக்கத்தையும் ஒரு பொருட்டாகக் கருதவில்லை.
எஃகுவான உடலை வருத்தி,
இளகுவான உளநிலை இறுக்கி, பொன்னான வாழ்வைச் சிதைத்து, பூரிதமான ஆயுளைக் குறைத்து, காலத்தோடு தன்னைக் கரைத்துக் காலத்தால் அழியாத பேராற்றலானார்.
அவரது இவ்விரு படைப்புகளும்,
வேத காலத்திலிருந்து இன்றுவரை இம்மண்ணில் மானுடத்தை இழிவு செய்யும் மனுநூலுக்கு எதிரானவை. அதேவேளையில் புரட்சிகரமான புதுவழி படைக்கும் மாற்றானவை.
மனுநூல், பிறப்பினடிப்படையில் உயர்வு- தாழ்வையும் அவற்றினடிப்படையிலான பாகுபாடுகளையும் இங்கே நெடுங்காலமாக நிலைக்கச் செய்த நூல். ஆகவே, மனுநூல் பரப்பிய மானுட இழிவை, மண்ணோடு மண்ணாய் மரித்திட வைக்க மாமனிதர் அம்பேத்கர் கண்ட மாற்றுக் கருத்தியல் போர்க்கருவிகளே இவ்விரு நூல்களும் ஆகும்.
இறையாண்மை, சமதர்மம், மதசார்பின்மை, சனநாயகம், கூட்டாட்சி, பன்மைத்துவம், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளை அடிப்படைக் கூறுகளாகக் கொண்ட அரசமைப்புச் சட்டம், மனுச் சட்டத்திற்கு நேர்ப் பகைச் சட்டமே ஆகும்.
அதேபோல, தனிமனித ஒழுங்கு, சமூக ஒழுங்கு ஆகியவையே உலக அமைதிக்கான பொது ஒழுங்கு என போதிக்கும் ஆதிபௌத்தமே, மனு ஒழுங்கு என்னும் மானுடக் கேட்டிற்குத் தீர்வு என்பதை உணர்த்தும் தூய அறநூலான ‘புத்தமும் அவரது தம்மமும்’ மனுதர்மத்துக்கு நேரெதிரான தம்மமே ஆகும்.
இதன் மூலம் புரட்சியாளர் அம்பேத்கர் வழங்கும் “நவயான பௌத்தம்”, இன்று உலக நாடுகளில் நடைமுறையிலிருக்கும் திரிபுநிலையுற்ற பௌத்தமில்லை.
அதாவது, கௌதம புத்தரின் ஆதிபௌத்தமும் இன்றைய உலகம் பின்பற்றும் கலவைப் பௌத்தமும் ஒன்றல்ல என்பதை எடுத்துரைக்கும் மாற்றுப் பார்வைகொண்ட மானுட வாழ்வியலின் மறநூல் தான் ‘புத்தரும் அவரது தம்மமும்’ஆகும்.
இது மனுநூலுக்கு எதிரான பகைநூலாகும்.
மனுவியம் சிதைக்கும்
மானுடமாகும்.
மேற்சொன்ன அரசமைப்புச் சட்டம் மற்றும் புத்தமும் அவரது தம்மமும் என்கிற நூல் ஆகிய இவையிரண்டும் பேரறிவாளர் அம்பேத்கர் என்னும் பேராற்றலின் பெருங்கொடைகள்.
இவை தீயவை எரிக்கும் தூயவை. சனநாயக அறத்தைக் காக்கும்
பேரரண்- பெருஅகழி.
இவையிரண்டையும் குறிவைத்துள்ள சனாதனத்தை அடையாளங்கண்டு அதனை முறியடித்திட அவரது நினைவுநாளில் உறுதியேற்போம்!
ஊதி அணைப்பதற்கு
அவர் –
திருவிளக்குத் திரியில்
எரியும் தீயல்ல;
பிரபஞ்சமெங்கும்
நிறைந்தும் மறைந்தும்
இயங்கும் ஊழித் தீ!
அறிவுலகைப் பற்றிப் பரவும்
திருஞானத் தீ!
பேராற்றலாய் பேருருக் கொண்ட பெருஞாலத் தீ!
தீ –
மறையும்; அழிவதில்லை!
புரட்சியாளர் அம்பேத்கர் –
மறைந்தார்; அழியவில்லை!
இந்தப் –
பேருண்மையை உணர்வோம்!
-நெஞ்சில்
பேரறிவாளரை ஏந்துவோம்!
பெருமைபொங்க-
பீடுநடை போடுவோம்!
– அவரின் ஞானப்
பேராயுதங்களை ஏந்துவோம்!
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.
@புதுதில்லி- 04-12-2024.