அனகாபுத்தூரில் குடியிருப்புகளை இடிக்கும் பணி; தலைமைச் செயலாளரை சந்திக்க திருமாவளவன் முடிவு

Sridhar Kannan

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில், அடையாறு ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் மூகாம்பிகா நகர், காயிதே மில்லத் நகர் மற்றும் ஸ்டாலின் நகரிலுள்ள குடியிருப்புகளை அகற்றும் பணி நடைப்பெற்று வரும் சூழலில் அங்கு வாழும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை போராடி வரும் அம்மக்களை தலைவர் அவர்கள் சந்தித்து நிலவரத்தை கேட்டறிந்தார்.

1987 வரையில் பட்டா வழங்கப்படக்கூடிய, மக்கள் வீடுகளை கட்ட உகந்த இடமாக அறிவிக்கப்பட்டிருந்த இப்பகுதிகள் 1987க்கு பிறகு குடியிருப்புக்கு உகந்த பகுதியில்லை என்று ஆவணங்களில் மாற்றப்பட்டிருப்பதாக அங்கே வாழும் மக்கள் ஆவணங்களுடன் தலைவரிடத்தில் எடுத்துரைத்தார்கள். அதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த தலைவர் அவர்கள், இப்பகுதிகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார். கிட்டத்தட்ட ஆற்றிலிருந்து 200 அடி தள்ளி அமைந்துள்ள இப்பகுதிகளால் ஆற்றின் போக்குவரத்தில் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லாத சூழலில், இப்பகுதிகளை இடிக்க முற்படுவது ஏற்புடையதல்ல என்று தலைவர் அவர்கள் தனது கருத்தினை பதிவு செய்தார். மேலும் இப்பகுதிகளில் வாழும் மக்களின் குரலை, அதிலிருக்கும் உண்மைகளை எடுத்துரைக்க தலைமை செயலகம் செல்லவிருப்பதாகவும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 

அதனை தொடர்ந்து தலைமை செயலகத்திற்கு புறப்பட்ட தலைவர் அவர்கள், தலைமை செயலாளர் மற்றும் நகர்புரத்துறை செயலாளர் அவர்களை நேரடியாக சந்தித்து மக்கள் தரப்பு கோரிக்கைகளை எடுத்து வைத்தார். நீதிமன்ற உத்தரவை மீறி எதுவும் செய்ய இயலவில்லை என்று தலைமை செயலாளர் தெரிவித்த நிலையில், நிலவரத்தின் முக்கியத்துவத்தை கணக்கில் கொண்டு, இப்பிரச்சினையை முதலமைச்சரிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று அவர்களிடத்தில் கோரிக்கை வைத்ததாக தலைமை செயலகம் வாசலில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தலைவர் அவர்கள் விளக்கினார்.

Share This Article
Leave a comment