Home அறிக்கைகள் அகில இந்திய அளவிலான பொதுவேலை நிறுத்தம் மற்றும் தமிழக அளவிலான கண்டன_ஆர்ப்பாட்டம்!

அகில இந்திய அளவிலான பொதுவேலை நிறுத்தம் மற்றும் தமிழக அளவிலான கண்டன_ஆர்ப்பாட்டம்!

16
0

பிப்ரவரி -12 ஒரேநாளில் இரு போராட்டங்கள்!

அகில இந்திய அளவிலான பொதுவேலை நிறுத்தம் மற்றும் தமிழக அளவிலான கண்டன_ஆர்ப்பாட்டம்!

 

வெகுமக்களுக்கு விரோதமான ஃபாசிச பாஜக அரசின் அடாவடிப் போக்குகளைக் கண்டித்து பிப்ரவரி 12 அன்று அகில இந்திய அளவில் பொதுவேலை நிறுத்தமும்; தமிழக அளவில் கண்டன ஆர்ப்பாட்டமும் என ஒரே நாளில் இரண்டு போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

மத்திய தொழிற்சங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகிய அமைப்புகள், தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிரான இந்திய அரசின் கொள்கைகளையும் சட்டங்களையும் எதிர்த்து இந்திய அளவில் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் யாவும் இந்த அறப்போராட்டத்திற்கு தமது ஆதரவை நல்கியுள்ளன. இந்த கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இந்தப் பொதுவேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறது.

அத்துடன், அதே நாளில் அன்றைய பிற்பகல் வேளையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணித்திருப்பதையும் ;
‘மகாத்மா காந்தி நூறுநாள் வேலைத் திட்டத்தின்’ பெயரிலுள்ள காந்தியின் பெயரை வேண்டுமென்றே மாற்றியுள்ள பாஜகவினரின் அற்பமான அரசியல் உள்நோக்கத்தையும் கண்டித்து இவ்வார்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக நடைபெறவுள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பங்கேற்கிறது.

முற்பகலில் அகில இந்திய அளவில் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்திலும்; பிற்பகலில் தமிழகத்தில் மட்டும் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திலும் விடுதலைச்சிறுத்தைகள் பெருமளவில் பங்கேற்று இவ்விரு போராட்டங்களையும் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.