எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக்காத்த சமூக நீதியை காப்பாற்ற விரும்பும் அதிமுக தொண்டர்களும் உதயசூரியன் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.
விழுப்புரம்: அதிமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஆறு மாதங்களில் அது பாஜக ஆட்சியாக மாறிவிடும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது திருமாவளவன் கூறியதாவது, “லட்சக்கணக்கான விடுதலை சிறுத்தைகளின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் தீவிரத்தை நான் மனதார பாராட்டுகிறேன். இது வெறும் வார்த்தைகள் அல்ல. இந்த வெயிலிலும் காத்து கிடக்கின்ற உங்களைப் பார்ப்பதில் நான் பெருமைப்படுகிறேன. வி.கூட்ரோடு மற்றும் முண்டியம்பாக்கம் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்க அன்னியூர் சிவா எடுத்த முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். இப்படிப்பட்ட செயல்வீரர் உங்களுக்குக் கிடைத்திருப்பது மிகப்பெரிய பாக்கியம். அவர் சாதி, மதம் பார்க்காமல் அனைவரோடும் இணக்கமாகப் பழகக்கூடியவர்.
விழுப்புரம் தொகுதி மக்கள் அளித்த ஆதரவால்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக மாறியுள்ளது. இந்தியாவில் பகுஜன் சமாஜ் கட்சி, பீகாரில் ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி, மகாராஷ்டிராவில் ராம்தாஸ் அத்வாலே கட்சிக்கு அடுத்தபடியாக, ஒரு அம்பேத்கர் இயக்கம் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது என்றால் அது விசிக தான். இதற்கு விழுப்புரம் மக்களின் வாக்குகள் தான் காரணம்.
விஜய் அழைக்கிறார், எடப்பாடி பழனிசாமி அழைக்கிறார்; அங்கே போனால் அதிக தொகுதிகளைத் தருவார்கள் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் நான் ஆதாயத்திற்காக போகவில்லை. கொள்கைக்காகவே திமுகவுடன் இருக்கிறேன். நாம் பேசும் சமூகநீதி அரசியலை திமுகவும், இடதுசாரிகளும் பேசுகின்றனர். இது ஒரு ‘உடும்புப் பிடி’ உறவு. பாஜக சாதி மற்றும் மதவெறியை தூண்டுகிறது.

பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு என்று கூறி பின்னாளில் அந்த ஆட்சியை ஜெயலலிதா வீழ்த்தினார். ஆனால், இன்று எடப்பாடி பழனிசாமி பாஜகவை தோளில் சுமக்கிறார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஆறு மாதங்களில் அது பாஜக ஆட்சியாக மாறிவிடும். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக்காத்த சமூக நீதியை காப்பாற்ற விரும்பும் அதிமுக தொண்டர்களும் உதயசூரியன் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும்.
உங்கள் ஒரு வாக்குக்கூட சிதறக்கூடாது; எந்த சூழலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி வைக்காது என ஜெயலலிதா கூறினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார். அதிமுகவிற்கு வாய்ப்பளித்தால் ஆறு மாதத்தில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். விசில் அடிப்பவர்களைத் தியேட்டருக்கு அனுப்பி வையுங்கள். சட்டமன்றத்தில் விசில் அடிக்க முடியாது; மேஜையை வேண்டுமானால் தட்டலாம்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காக அன்னியூர் சிவாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்” என்றார்.
இதனிடையே, விசிக தொண்டரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய திருமாவளவன், நான்கு நாட்களே ஆன குழந்தையை ஏன் இந்த கடும் வெயிலில் தூக்கி வருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி குழந்தையின் தந்தையை கண்டித்தார்.










