பாதங்களினால் மண்ணை
உழுகிறவன் நீ
அழுத்திப் பதித்து நடக்கையில்
அறம் விளைகிறது
பூமித்தாய் புலகாங்கிதமடைகிறாள்
உன் பாதங்களில் மானுடநதிகள் சங்கமிக்கின்றன
கண்கள் சோர்ந்தாலும்
உறங்காதவை உன் பாதங்கள்
ஓர் ஆண்மகனின் பாதங்களென
நிலமகள் பூப்பெய்துகிறாள்
மலைமகள் புதுப்புது
மலர் வனங்களைப் பிரசவிக்கிறாள்
உன் பாதங்கள் படர்த்திச் செல்கிற வசந்தங்களில்
விடுதலை கானங்களைப்
பாடுகின்றன குயில்கள்
தேடித் தேடி அலையும் நின் பாதங்களில்
எதேச்சதிகாரப் பாறைகள்
இடிந்து நொறுங்குகின்றன
தெறித்தோடும் விலங்குகளின்
பேரிரைச்சல் கேட்கின்றன
சாதிமத வர்க்கத்தினைச்
சமன்படுத்தும் பாதங்கள்
உன்னுடையவை
மனுதர்மப் பெருந்தலைகளை
விரட்டிப் பந்தாடியவை
தம்மச் சக்கரத்தை
இடையறாது சுழற்றுபவை
வீங்கிச் சிவந்திருக்கும்
நின் திருப்பாதங்களில்
எம் காலங்கள் கனிந்திருக்கின்றன
அதன் சுவடுகளில் தலைநிமிர்வுக்கான தடயங்கள் பொதிந்திருக்கின்றன
நூற்றாண்டுகளின் பாரங்களைக் கவிழ்த்தெறிந்த திணைக்குடிகள்
உன் பாதங்களையே
கிரீடங்களாய்ச் சூடுகிறார்கள்
உயிர் மானம் உடைமையின்
காவல் தெய்வங்கள் அவை
தமதுள்ளப் பெருங்கோயிலின்
கலசமெனப் பூஜிக்கிறார்கள்
சமத்துவச் செருக்களத்தில்
சனாதனக் கொடுஞ் சிரசங்கள்
அதிர அதிரப் படை நடத்தும்
பாதங்களுடைத் தலைவ
திருமாவளவ
வாழ்க நின் திருப்பாதம்!
-வெண்ணிலவன்