கொள்கை பகைவருக்கு… தொல்.திருவாவளவன் கவிதை

Sridhar Kannan

ஆத்திரம்
ஆவேசம்
அநாகரிகம்

அனல் பறக்கும்
உணர்ச்சிகள்
கனல் தெறிக்கும்
மொழிகள்

இடம் பொருள்
அறிந்தால்…

சுடுமொழிகள் வீண்
சுட்டுமொழிகளே வாள்

இருமலே
பகைமையை
அச்சுறுத்தும்
உறுமல்

மெல்ல
கனைக்கும் ஓசையே
எதிரிகளின்
நெஞ்சாங்குழியில்
நடுக்கம்தரும்
இடிமுழக்கம்

மென்மையாய்
வெளிவிடும் மூச்சே
பகைக் கூட்டத்தின்
நெஞ்சைப் பதறவைக்கும்
சுனாமி

ஓரிரு நொடிகள்
நிலைகுத்தி நிற்கும்
பார்வையே
பகைவரின் மார்பைச்
சல்லடையாய் துளைக்கும்
சரமாரிக் கணைகள்

அமைதிதான்
ஆயுதக்கிடங்கு

மௌனம்தான்
புயலின் மையம்

பெருந்தன்மைதான்
பேசும்மொழி

நனிநாகரிகம்தான்
பேராளுமை

சகிப்புத்தன்மையே
சமரசமில்லா
போர்க்குணம்

பொறுமையே
பற்றிப்பரவும்
பெருநெருப்பு

விரல்நீட்டித்
தொடுவதே
வீறுகொண்ட
போர்த்
தொடுப்பு

நயதக்க இடித்துரை
புரிந்தால்…

சுட்டுதலே
சுடுதல்

தோழமை சுட்டுதல்
நட்பார்ந்த
நாகரிக இடிப்பு

– தொல்.திருமாவளவன்.
18.05.2020

Share This Article
Leave a comment