முனைவர் ராஜ் கௌதமன் மறைவு தமிழ் ஆய்வுலகுக்கு நேர்ந்த பேரிழப்பு!

Sridhar Kannan

முனைவர் ராஜ் கௌதமன் மறைவு
தமிழ் ஆய்வுலகுக்கு நேர்ந்த பேரிழப்பு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
—————————————————————–

தமிழ் ஆய்வறிஞரும் தலித்திய சிந்தனையாளருமான பேராசிரியர் ராஜ்கௌதமன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி தாங்கவொண்ணா வேதனையளிக்கிறது. அவரது மறைவு தமிழ் ஆய்வுலகுக்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

பேராசிரியர் ராஜ்கௌதமன் அவர்கள் சுமார் 40 ஆண்டுகளாகத் தமிழ் ஆய்வுகளில் ஈடுபட்டு, பாராட்டுத்தக்க ஆய்வு நூல்களை எழுதி இருக்கிறார். அ.மாதவையா, இராமலிங்க அடிகளார், அயோத்திதாசப் பண்டிதர் முதலானவர்கள் குறித்து காய்தல் உவத்தலின்றி அவர் படைத்த நூல்கள் கருத்தாழமும், இலக்கியச் சிறப்பும் கொண்டவை. மார்க்சியம், அம்பேத்கரியம், பின்னவீனத்துவம் ஆகிய சிந்தனைகளின் துணையோடு அவர் மேற்கொண்ட தமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் சங்க இலக்கியங்களைப் புதிய நோக்கில் பார்ப்பதற்கு வழி கோலின.

புரட்சியாளர் அம்பேத்கரின் நூற்றாண்டைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தளத்தில் உருவான தலித் சிந்தனை மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் அவர் முதன்மையானவர். அவரது ‘தலித் பண்பாடு’ என்ற ஆய்வு நூல் வெளியான போது, அது நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விரிவான உரையாடலை ஏற்படுத்தியது.

தனிப்பட்ட முறையில் என்னோடும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோடும் இணக்கமான நல்லுறவைப் பேணி வந்தவர். தமிழ்ப் பரப்பில் ஆய்வறிஞராக செயல்பட்ட போதிலும் அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தவர். எம்மைப் போன்றோரின் பணிகளுக்கு உரிய மதிப்பளித்து ஊக்குவித்தவர். அவரது மறைவு ஈடுசெய்ய இயலாததாகும்.

இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் முனைவர் ராஜ் கவுதமன் அவர்கள் ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்பைப் போற்றி, கடந்த ஆண்டுக்கான (2023) ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருதினை அளித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெருமை கொண்டது.

அவரது ஆய்வுகளுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்ப் புலமைச் சூழலையும் பற்றியிருக்கும் பாகுபாட்டு உணர்வு அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்குத் தடையாயிருந்தது வேதனைக்குரியதாகும்.

தமிழ்நாடு அரசு அவரது நூல்களை அரசுடமையாக்கி அனைவருக்கும் எளிதில் கிடைத்திட வழி செய்ய வேண்டும். அத்துடன் உரிய அரசு மரியாதையோடு அவரை நல்லடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

Share This Article
Leave a comment